திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாயிலில் காத்திருந்தார். இந்நிலையில் அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்கு விரட்டினர். அதன் பின்னர் அவர் உயிருக்குப் பயந்து ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் நீதிமன்ற வாயிலில் வைத்து கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.
அதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மூன்று பேர் ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் என்ற நபரை போலீசார் கைது செய்திருந்தனர். ஐந்தாவது நபராக மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் தேடப்படும் மொத்த குற்றவாளிகளில் ஆறு பேரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதம் ஒரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.