Skip to main content

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் மரியாதை

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

நாட்டின் முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார். இந்திய விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற 2வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவைக் கட்சித் தலைவராகக் கடந்த 1957 முதல் 1977 வரை செயல்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு அமைச்சராக அங்கம் வகித்தார். பாஜக தேசிய தலைவராக 1980 முதல் 6 ஆண்டுக்காலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் மறைந்தார்.

 

இந்நிலையில் அவரது 5வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்