
கடந்த 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதற்காக 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதியில் உள்ள மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் பாறை மண் சரிந்த இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் பொழுது பொதுமக்கள் பக்தர்கள் யாரும் மலை மீது ஏற அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் முந்தைய காலங்களில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதி பெற்று மலை ஏற அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற 53 வயது பெண் கட்டுப்பாடுகளை மீறி திருவண்ணாமலை மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. கந்தாஸ்ரமம் வரை சென்ற நிலையில் அதற்கு பிறகு வழி தெரியாமல் மலைக்கு பின்புறமாக சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்னபூர்ணாவை காணவில்லை என அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக மலைப்பகுதியில் தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மலையின் ஒரு பகுதியில் பெண் இருந்தது தெரியவந்தது. உடனடியாக வனக்காப்பாளர் ராஜேஷ் என்பவர் அப்பெண்ணை முதுகில் தூக்கியபடி இன்று அதிகாலை மலையில் இருந்து கீழே இறக்கிக் கொண்டு வந்தார்.