லடாக் எல்லைப்பகுதியில் ஒப்பந்தத்தைமீறி சீன வீரர்கள் பாங்காங் டே ஏரிப் பகுதிக்கு முன்னேறியதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த மோதலை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதி திரும்பியது.
இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாங்காங் ஏரிப் பகுதியின் தென்முனையில் ஏற்கனவே இருக்கும் பகுதியைத் தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் சீன ராணுவத்தினர் முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "சீன ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் பாங்காங் ஏரிப்பகுதியில் செயல்களைச் செய்தனர். ஆனால், சீன ராணுவத்தினரின் செயலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் அவர்களை அத்துமீறி நடக்கும் முயற்சிக்கும், ஆத்திரமூட்டும் செயல்களையும் தடுத்து நிறுத்தி முறியடித்தனர். நம்முடைய எல்லைப் பகுதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.