கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விட குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் நீர் வரத்து குறைந்துவிட்டதால், பெங்களூர் பகுதியைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, டேங்கர் லாரி மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதனிடையே, 3000க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால், அதனைப் பயன்படுத்தி வந்தவர்கள் குடிநீர் லாரிகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூருவில் தானியங்கி தண்ணீர் வழங்கும் மையங்களில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், இந்த தானியங்கி மையங்களில் 5 ரூபாய் நாணயம் செலுத்தி தண்ணீரைப் பிடித்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தட்டுப்பாடு காரணமாக காலை மற்றும் மாலையில் மட்டுமே தண்ணீர் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.