துபாய் சென்று வேலை கிடைக்காத விரக்தியில் இந்தியா திரும்பிய ஒருவருக்கு, அந்நாட்டில் வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் 28 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விலாஸ் ரிக்கலா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்போது ஐதராபாத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஓட்டுநர் பணி தேடுவதற்காக துபாய் சென்ற இவர், அங்கு வேலை ஏதும் கிடைக்காததால் விரக்தியில் மீண்டும் ஊருக்கு திரும்பும் முடிவில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென லாட்டரி சீட்டு ஒன்றை வாங்க நினைத்துள்ளார் அவர். ஆனால் அதனை வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லாததால், அவரது மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டுள்ளார். பின்னர் மனைவி அனுப்பி வைத்த பணத்தை கொண்டு அவரது நண்பர் மூலம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதன்பின்னர், வேலை கிடைக்காததால் இந்தியா திரும்பிய அவர், ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் விழுந்திருப்பதாக நேற்று மாலை அவருக்கு தகவல் வந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 28 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும். இந்நிலையில், "என்னிடம் பணமில்லாததால், மனைவி பத்மாவிடம் பணம் கேட்டேன். பின்னர் அவர் பணம் அனுப்பியதும் அதனை அபுதாபியில் வேலை பார்க்கும் என நண்பன் ரவியிடம் கொடுத்து, லாட்டரி சீட்டு வாங்கச் சொன்னேன். அதற்கு பரிசு விழுந்திருக்கிறது. இதற்கு முழு காரணமும் என் மனைவி பத்மாதான்" என கூறி மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறார் ரிக்கலா.