எதிர்வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
![gowda](http://image.nakkheeran.in/cdn/farfuture/rTg1bp71n3FZKLwO3pxWYnFgwg3sCJ8dcrqBmanrslM/1552648492/sites/default/files/inline-images/gowda-std.jpg)
இதில் தேவகவுடா வழக்கமாக போட்டியிடும் ஹாசன் தொகுதியில் அவரது பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா இம்முறை போட்டியிடவுள்ளார். அவரது மற்றொரு பேரன் நிகில் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே அவரது மகன் குமாரசாமி முதல்வராகவும், மற்றொரு மகன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருப்பதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் ப்ரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. அப்போது பேசிய தேவகவுடா, ‘‘ எனது இளமை காலம் முதல் ஹாசன் தொகுதி மக்கள் என்னை ஆதரித்து, தேர்தலில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அரசியலில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன். இந்த தேர்தலில் ஹாசன் தொகுதியில் எனக்கு பதிலாக என் பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இனி அவருக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
எல்லோரும் மஜதவை சாதி கட்சி என்றும், குடும்ப கட்சி என்றும் விமர்சிக்கிறார்கள். அதனால்தான் தேர்தலில் நிற்கும் முடிவை நான் கைவிட்டுள்ளேன். என் பேரன் இந்த தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார். அதனால் நான் இங்கிருந்து விலகி கொள்கிறேன்'' என கூறியவாறு, கண்ணீர் விட்டு அழுதார்.
இதனை பார்த்து மேடையில் நின்று கொண்டிருந்த அவரது மகன் ரேவண்ணா, அவரது மனைவி பவானி, பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணாவும் கண்ணீர் விட்டு அழுதனர். மேடையில் தேவகவுடா குடும்பத்துடன் அழும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.