மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை, வீடு திரும்புவதில்லை என்ற முடிவில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகத்தைத் தீர்க்க, வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 8 கோடி ரூபாய் செலவு செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டங்கள் தொடர்பான தொடர் பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், விளம்பரங்களுக்கு 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.