மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.
இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. இருந்த போதிலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில், குத்துச் சண்டை வீரர் ஒருவர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா உள்விளையாட்டு அரங்கத்தில் MFN 14 (எம்.என்.எஃப்) நடத்தப்படும் தற்காப்பு கலை எனும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிடைக்கப்பெறும் சாம்பியன் பட்டத்திற்காக அறிமுக வீரர் முகமது ஃபர்ஹாத் மற்றும் மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த போட்டியில், இறுதியாக சுங்ரெங் கோரன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்ற பிறகு மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன், மணிப்பூரை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியதாவது, “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் உயிரிழந்து வருகின்றனர், பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே , தயவு செய்து மணிப்பூருக்கு ஒருமுறை சென்று மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டம் வென்ற மணிப்பூர் வீரர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.