இந்தியாவில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் வேலையின்மை 7.2 சதவீதமாக உள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் தற்போதுதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலையின்மை 5.9 சதவீதமாக இருந்திருக்கிறது என இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குபின், 2018-ம் ஆண்டில் 11 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. முறையால் மில்லியன் கணக்கில் சிறு மற்றும் குறு தொழிலாளர்களை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசோ நாடாளுமன்றத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாக தரவுகள் ஏதும் இல்லையென கடந்த மாதம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதே இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் 2018-ம் ஆண்டு நடத்திய வேலை வாய்ப்பின்மை ஆய்வில் கடந்த ஆண்டு 6.9% அதிகரித்திருந்ததாக அறிவித்திருந்து. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்ட வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தில், இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.