Skip to main content

விமானத்தில் வாக்குப்பெட்டிக்கு தனியாகப் பயணச்சீட்டு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

A separate ticket for the ballot box in the plane!

 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்ற பெயரில் பயணச்சீட்டு பெறப்பட்டு, விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது தற்போது தெரிய வந்ததுள்ளது.

 

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

 

இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டனர்.

 

இதன்படி நேற்று முன்தினம் (18/07/2022) நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் நாளை (21/07/2022) டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

இந்த முறை விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக சொகுசு இருக்கையில் இந்த வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அதாவது 'மிஸ்டர். பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் ஒரு விஐபி எப்படி டெல்லி சென்றால், அரசு எப்படி அவருக்கு பாதுகாப்பு அளிக்குமோ அந்த வகையில் இந்த ஏற்பாடுகள் இருந்தது.

 

'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' சீல் வைக்கப்பட்டு மாநில காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையங்களில் சோதனை முடிந்த பிறகு தனி வாகனத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' விமானத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

 

அப்போது விமானங்களில் வாக்குப்பெட்டிகளை வைக்க தனி பயணச்சீட்டு பெறப்பட்டதும், அதில் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. அந்த பெட்டியுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும் டெல்லி சென்று அந்த வாக்குப்பெட்டியை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்