Skip to main content

11 ஆண்டுகளாக ஆற்றில் நீந்தி சென்று பாடம் எடுக்கும் பினோதினி டீச்சர்..!

Published on 14/09/2019 | Edited on 15/09/2019

ஒடிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் உள்ள ரதியபலா தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் பினோதினி சமல். 2008-ஆம் ஆண்டு ரதியபலா பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்த பினோதினி சமலுக்கு வயது 49. குழந்தைகளின் கல்விச் சேவைக்காக திருமணம் கூட செய்துகொள்ளாமல், தன் அண்ணன் வீட்டில் இருந்து தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, அங்குள்ள சபுவா நதியைக் கடந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார். மழை காலங்களில் நதியோடு சேர்ந்து தண்ணீர் பெருகி ஓடுவதோடு, வெயில் காலங்களில் ஓரளவேனும் தண்ணீர் வற்றிப் போயிருக்கும். அப்போது போக்குவரத்து கொஞ்சம் எளிதானதாக இருக்கும்.
 

f



ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான, 55 மாணவர்களுக்கு ஆசிரியையாக இருக்கும் பினோதினி சமல், எத்தனை மழை, இடி, புயல், வெள்ளம் வந்தபோதிலும் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், மாணவர்களுக்கு தங்கு தடையில்லாத கல்வியைக் கொடுக்கும் நோக்கில், கழுத்தளவு ஆழத்திலும் நதியைக் கடந்து செல்கிறார். இந்த நதியின் மேல் பாலம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு ஆனால் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடும் பினோதினி, தனக்கு இதைவிட்டால் வேறென்ன வேலை என்பதால் தினமும் பள்ளிக்குச் சென்றுவிடுவதாகத் தெரிவிக்கிறார்.

எப்போதும் ஒரு மாற்றுப் புடவையுடன் நதியைக் கடக்கும்போது, தனது செல்போன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு பைக்குள் வைத்துக்கொண்டு, நதியைக் கடந்தவுடன் சென்று பள்ளிச் சீருடைக்கான புடவையை, பள்ளியில் சென்று மாற்றிக்கொள்வதும் பினோதினியின் வழக்கம். அப்படி இருந்தும் பல முறை நதியைக் கடக்கும்போது தவறி விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்