இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று (16.07.2021) தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "சாத்தியமான மூன்றாவது அலை குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ள கட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த சில நாட்களில், சுமார் 80 சதவீத புதிய கரோனா பாதிப்புகள் இந்த 6 மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன. அதிக கரோனா பாதிப்புகள் பதிவாகும் மாநிலங்கள், சாத்தியமான கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், "பரிசோதனை - தடமறிதல் - சிகிச்சையளித்தல் - தடுப்பூசி செலுத்துதல் என்ற அணுகுமுறையைக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்" என கூறியுள்ள பிரதமர் மோடி, "கரோனாவை எதிர்கொள்ள இந்திய அரசு, 23 ஆயிரம் கோடி அவசரகால நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள், இந்தத் தொகுப்பிலுள்ள நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களில் கவனம் செலுத்த வேண்டியதற்கான தேவையுள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.