ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது விவகாரம் தொடர்பாக, அம்மாநிலத்தில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்திருக்கக் கூடிய புகார்களின் உண்மை தன்மை குறித்து வேண்டும் என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் ஏராளமான கோரிக்கைகள் முன்வைத்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதில், ஆந்திரா அரசுக்கும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏராளமான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், எதற்காக எடுத்த உடனேயே இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளிக்கு கொண்டு சென்றார்?. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?. லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன?.
இந்த விவகாரத்தில், உங்களது அரசியலில் இருந்து கடவுளை தள்ளி வைத்திருக்க வேண்டும். ஊடகங்களிடம் ஆந்திரா முதல்வர் முறையிட்டு கையாண்ட விதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனில் பத்திரிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?. மேலும், கலப்படமான நெய் பயன்படுத்தப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்திருக்கிறார்கள். அதனை ஆய்வு செய்வதற்கு முன்பாக, தானாகவே ஒரு முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? என்று உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.