இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமிகுந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி சார்பில் சாம்பிவி சவுத்ரி போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1,87,251 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல், ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் தொகுதியில் இளம் வயது வேட்பாளர் சஞ்சன ஜாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை ராம்சுவரூப் கோலியை தோற்கடித்து 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட இளம் வயது வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், பா.ஜ.க வேட்பாளர் வினோத் குமாரை தோற்கடித்து 1,03,944 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவர். அதே போல், மற்றொரு சமாஜ்வாதி இளம் வயது வேட்பாளர் பிரியா சரோஜ்,, உத்தரப் பிரதேசம் மச்சிலிஷாஹர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் போல்நாத்தை 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.