நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மராட்டியத்தில் 11 தொகுதிகளிலும் கோவாவின் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் அஸ்ஸாம் - 3, பீகார் - 5, சத்தீஸ்கர் - 7, மத்தியப் பிரதேசம் - 8 (பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து 2 ஆம் கட்டத்திலிருந்து 3 ஆம் கட்டத்துக்கு மாற்றப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதிக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது. ), உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருகை புரிந்து வாக்களித்தனர்.