திடீரென ஒருவரின் Phonepe அக்கவுன்ட்டுக்கு வந்த 201 ரூபாயும் அதற்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிப் பூர்வமான சம்பவமும் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் சிங். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கமல் சிங், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகம் தெரியாத நபருடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதற்காக 201 ரூபாயை ஃபோன்பே மூலம் அனுப்பியிருக்கிறார். அந்த நபருக்கு பணம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல் “என்னால் முடிந்த சிறிய உதவி. அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். அந்தப் பணத்தைப் பெற்ற நபர், கமல் சிங்குக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். காலப்போக்கில் இந்த சம்பவத்தை மறந்த கமல்சிங் அவரின் அன்றாட வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று திடீரென கமல் சிங்கின் ஃபோன்பே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளது. அப்போது இந்த பணத்தை யார் அனுப்பியது என்று கமல்சிங்குக்கு தெரியாமல் இருந்துள்ளது. அதன் பிறகு, பணம் வந்த சாட் மெசேஜை திறந்து பார்த்தபோது கமல் சிங்குக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கு முன், முகம் தெரியாத நபரின் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு கமல்சிங் அனுப்பிய 201 ரூபாயை அந்த நபர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த கமல் சிங் அவருடைய அம்மாவின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்து மெசேஜ் அனுப்பினார்.
இது குறித்து கமல் சிங் கூறியது: “என்னுடைய ஃபோன்ஃபே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆனதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆனால், யாரிடமிருந்து என்பது தெரியவில்லை. பின்னர், அதில் நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு சமூக வலைதளத்தில் ஒரு கிரவுட் ஃபண்டிங் கோரிக்கைக்கு ஒரு நபருக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பினேன்.” என்பது தெரிந்தது.
பணத்தை திருப்பி அனுப்பிய நபர் கூறியது...அம்மா நலமாக இருக்கிறார். என்னுடைய பிஸ்னஸும் நன்றாக இருக்கிறது. அதனால்தான், எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தவர்களுக்கு தான் பெற்ற பணத்தை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்றி, என்று பதில் அனுப்பினார். இந்த உரையாடலை, கமல் சிங் அவருடைய லிங்க்டு-இன் கணக்கில் பதிவிட்டு அந்த நபரை பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.