கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ விரைவில் தொடங்கும் என்று பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா நேற்று முன்தினம் (02-09-23) ஷிவமெக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி பெரிய கூற்றுகளை முன்வைக்கிறது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களில் பாதி பேர் தங்கள் கட்சியில் சேர்வார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரு எம்.எல்.ஏ கூட இதுவரை காங்கிரஸுக்கு மாறவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே இருக்காது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்கு முன்னரோ கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. கர்நாடகா மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ விரைவில் மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கிறேன். முடிந்தால், பா.ஜ.கவில் இருக்கக்கூடிய ஒரு எம்.எல்.ஏவையாவது உங்கள் கட்சிக்கு இழுத்துக் காட்டுங்கள். காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு அந்த கட்சி மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்று அந்த கட்சியில் இருக்கும் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை அணுகியுள்ளனர்” என்று கூறினார்.