புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும், புதுச்சேரியைவிட்டு அவர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8ஆம் தேதி முதல் நான்கு நாள் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.
இந்தத் தொடர் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு முதலமைச்சர் நாராயணசாமிக்கு
ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், “கிரண்பேடி, புதுச்சேரியில் இருந்துகொண்டு மத்திய அரசு, மதவாத சக்திகளின் கைப்பாவையாக செயல்பட்டுவருகிறார். நாட்டுக்கு ஆளுநர், துணைநிலை ஆளுநர் பதவிகள் தேவையற்றவை.
ஆட்சி நிர்வாகத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆளுநர், துணைநிலை ஆளுநர்களால் மக்களுக்கும், அரசுக்கும் இடையே சிக்கல் ஏற்படுகிறது. புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது. அரசு எடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் தராமல் துணைநிலை ஆளுநர் நெருக்கடி தருகிறார். இதனால் ஆளுநருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அரசுக்கு நாள்தோறும் பிரச்சனை ஏற்படுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து பேசும்போது, “துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்காக ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் செலவாகிறது. இது புதுச்சேரி மக்களின் வரிப்பணம். அவருடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறும் கிரண்பேடி, புதுச்சேரி மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி உரிய மரியாதை அளிக்க வேண்டும். புதுச்சேரி நலனுக்காக முதல்வர் நாராயணசாமி தரையில் படுத்து தூங்கி போராட்டம் நடத்துகிறார். இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும் மழையிலும் நடத்தும் போராட்டத்தையே கண்டுகொள்ளாத மத்திய அரசு புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை எப்படி கண்டுகொள்ளும்” என்றார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக எந்த கோப்பை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகிறார். பிரதமர், உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு எதையும் செய்யக்கூடாது என ஆளுநரும், சில அதிகாரிகளும் செயல்படுகின்றனர். நாம் காந்திய வழியில் அறவழிப் போராட்டம் நடத்துகிறோம். இன்னும் பல போராட்டங்களை நடத்த உள்ளோம். ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசுக்கெதிரான போராட்டங்கள் தொடரும்” என்றார்.