இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கரோனா பரவல் அதிகரிப்பு குறித்து சமீபத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், இந்தியாவில் மூன்று வகை மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து பரவிய இந்த கரோனாக்களால், இந்தியாவில் இதுவரை 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் தேதி வரை மூன்று வகை கரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் 335 பேர் புதிதாக மரபணு மாற்றமடைந்த கரோனாக்களால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.