Skip to main content

ஏப்ரல் 6இல் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 03/04/2025 | Edited on 03/04/2025

 

Edappadi Palaniswami meeting with PM Modi on April 6

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடச் செல்வதாகக் கூறியிருந்த நிலையில் அன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டதாகவும், இதற்கான அனுமதியைப் பிரதமர் அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடியை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்