நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மக்களவையின் சபாநாயகர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். அதனையடுத்து, 18வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில், ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபோது பஞ்சாபின் கதூர் சாஹிப் மற்றும் ஜே-கேவின் பாரமுல்லாவில் இருந்து சுயேட்சைகளாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதைக் காட்டுகிறது.
மக்களவையில் பலமான எதிர்க்கட்சி என்பது கட்டமைக்கப்பட்ட முறையில் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இவை சவால்கள் அல்ல, ஒரு வாய்ப்பு. வலுவான எதிர்க்கட்சி தனது கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒப்பந்தங்களும், கருத்து வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துக்களையும் அரசாங்கம் அறிந்து கொள்கிறது. பார்வைகள் அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்திற்கும், தெருவில் நடக்கும் விவாதங்களுக்கும் நாட்டு மக்கள் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.