கேரளாவின் தெற்கு பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இப்பருவமழை செப்டம்பர் மாதம்வரை நீடிக்கும் எனவும், கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு மழையினால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயனடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம், ஆந்திராவை தவிர பெரும்பாலான மாநிலங்கள் கிட்டத்தட்ட, 75 சதவீதத்திற்கும் அதிகமான மாநிலங்களுக்கு முழுமையாக மழை தரக்கூடியதாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது இயல்பு அல்லது இயல்பான அளவை ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இயல்பான அளவை ஒட்டியிருக்கும். மத்திய இந்தியப் பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.