குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் அகதிகளாக வந்த இஸ்லாமியர்கள் அற்ற மற்ற மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இந்த சட்டத்தை எதிர்த்தது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்னாவின் இந்த கட்டுரையில், "‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவ கொள்கைகளுக்காக போராடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. குடியுரிமைச் சட்டம் சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அவற்றை சரி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.