ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், அந்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, தலிபான்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "தலிபான்களை இந்தியா அங்கீகரிக்கிறதோ இல்லையோ, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் நேரத்தை இழந்துவிட்டோம். ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை நாம் கட்டிக்கொடுத்துள்ளோம். அதைத்தான் அண்மையில் பிரதமர் மோடியும் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியும் திறந்துவைத்தனர்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நமக்கு அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என அனைத்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களும் கூறினர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் அரசு ஆட்சி செய்யப்படாத இடங்கள் உள்ளன, அது இந்தியாவிற்கு பெரும் கவலை. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா ஆகியவை தங்களின் முக்கிய தலைமையகத்தையும், ஆள்சேர்ப்பு பணியையும் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு மாற்றியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது இப்போது ஹெல்மண்ட் மாகாணத்தில் வேரூன்றியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.