சுதந்திர இந்தியா, தனது 75 வது ஆண்டில் நுழைந்திருக்கிறது. இந்த சுதந்திர இந்தியாவில் இதுவரை பலருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவை நிறைவேற்றவும் பட்டுள்ளது. ஆயினும், நம் நாட்டில் இதுவரை எந்த பெண்ணுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிடுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அந்தப் பெண் செய்தக் குற்றம் என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பள்ளி ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் கர்ப்படைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை.
இதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பாலில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து அவர்களின் கழுத்தை அறுத்து, கொடூரக் கொலையைச் செய்துள்ளார். தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொலை செய்துள்ளார் சப்னம் அலி.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தை விசாரித்த உத்தரப்பிரதேச மாநில நீதிமன்றம், சப்னம் அலி மற்றும் சலீமிற்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் சப்னம் அலி அடைக்கப்பட்டுள்ள மதுரா சிறை நிர்வாகம், அம்ரோஹா மாவட்ட நிர்வாகத்திடம் அவரது மரண தண்டனைக்கான உத்தரவைப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவரை தூக்கிலிடுவதற்கான பணிகளையும் செய்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தப் பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. இதற்கு முன் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடதக்கது.