புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டாம் எனக்கூற கிரண்பேடி யார்? ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரத்தயாரா..? நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களுடன் தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று உள்துறையிடம் வலியுறுத்தினோம்.
மத்திய அரசு நிதி வழங்குவதில் பாகுபாடு காண்பிப்பதாலும், மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரி மாநிலம் சேர்க்கப்படாததாலும், புதுச்சேரி மாநிலம் நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே வெற்றி எனும் நிலையில் டெல்லி பயணம் திருப்திகரமாக அமைந்தது. நாங்கள் சந்தித்த அனைத்து கட்சி பிரதிநிகளும் முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்றால் மாஹே, ஏனாம், காரைக்கால் என நான்கு பிராந்தியங்களிலும் ஒருங்கிணைத்து தான் இருக்க வேண்டும். அதை ஒத்து தான் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டாம் எனக்கூற துணைநிலை ஆளுநர் யார்? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மக்கள் விரும்பவில்லை எனக்கூறும் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரத்தயாரா? மாநில அந்தஸ்து தொடர்பாக உள்ஒன்றும் புறம் ஒன்றுமாக ரங்கசாமி பேசுகின்றார்.
லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.