
மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (10.03.2025) தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “பெரியார் தனது விடுதலை நாளேட்டில் கடந்த 1943ஆம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, ‘தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது. தமிழ் படித்ததில் பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ்வதற்கு ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்க்கைக்கு பயன்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் பாடியுள்ளார்’” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல பெரியார் மற்றொரு இடத்தில், ‘இந்த தமிழ்மொழியானது காட்டுமிராண்டி மொழி என சொல்கிறேன் என்று கோபித்து கொள்ளும் யோக்கியர்கள் ஒருவரும் சிந்தித்து பேசுவதில்லை. வாய் இருக்கிறது என்று ஏதாவது பேசி வயிற்றை வளர்ப்போம் என்பதை தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமல் பேசுகின்றனர். இப்படிபட்ட இவர்கள் நோக்கப்படி சிந்தித்தாலும், தமிழ்மொழி 3ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி என தமிழன் பெருமைக்கொரு சாதனமாக பேசுகிறார்கள்.
நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதையேதான் காரணமாக சொல்கிறேன். அன்றிருந்த மக்களின் நிலை என்ன அவர் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும். எவன் தான் ஆகட்டும். இவர்களை பற்றி தெரிந்துகொள்ளும் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழை பற்றி பேசும் தகுதி உடையவனா? உனக்கு வாய் இருக்கிறதா?” என்றும் பெரியார் பேசியிருக்கிறார். தமிழ் எனது தாய்மொழி, பெரியார் இப்படி பேசியதை கேட்கும்போது எனக்கு கோபம் வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கொந்தளிக்கிறார்கள். ஆனால் பெரியார் இத்தனைமுறை தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியுள்ளாரே” எனப் பேசினார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?. முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?. குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.