8 வயது சிறுமி ஒருவர் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி உள்ளேயே உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கவேண்டும் என கூறிய மருத்துவர்கள், அரசு மருத்துவமனையிலேயே செயல்படும் தனியார் ஸ்கேன் நிறுவனத்திடம் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அதன்படி அந்த சிறுமிக்கு ஸ்கேன் செய்தபோது அதிக அளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் ஸ்கேன் செய்யும் கருவிக்குள்ளேயே அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஸ்கேன் மைய தலைமை அதிகாரி, குழந்தை ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் இருந்தது. அதனால் தான் குழந்தை இருந்ததே தவிர, எங்கள் தவறால் இல்லை என கூறியுள்ளார். இறந்த சிறுமியின் தந்தை, குழந்தைக்கு மயக்க மருந்து வேண்டாம் என ஸ்கேன் எடுப்பதற்கு முன்னரே கூறியிருந்த நிலையிலும், ஸ்கேன் மைய நிர்வாகம் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தையின் இறப்பு குறித்து நடவடிக்கை வேண்டி உறவினர்கள் போராடியபோது, எம்.ஆர்.ஐ ஸ்கேன் மைய ஊழியர்கள் சிறுமியை உடற்கூராய்வு செய்து கண்களை எடுத்துவிடுவோம் என பயமுறுத்தியதாக சிறுமியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்தது அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே மயூர்யா, இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.