மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல், டெல்லி - ஹரியானா எல்லையான சிங்கு எல்லையிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹரியானாவின் குண்ட்லியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கவிழ்த்துபோடப்பட்ட காவல்துறை பேரிக்காடில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளார். அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு தரையில் கிடக்கும் நபரைச் சுற்றி, நிஹாங்ஸ் எனப்படும் ஆயுதம் ஏந்திய சீக்கிய பிரிவினர் நிற்பது போன்ற வீடியோ ஒன்று பரவிவருகிறது. இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துவரும் 40 வேளாண் அமைப்புகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் ராஜேவால், "இந்த சம்பவத்திற்குப் (கொலைக்கு) பின்னால் நிஹாங்ஸ்தான் இருக்கிறார்கள். அதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஹரியானா அரசுடன் ஒத்துழைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹரியானா காவல்துறை டிஎஸ்பி, "கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அடையாளம் தெரியாத நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வைரல் வீடியோ (மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு தரையில் கிடக்கும் நபரைச் சுற்றி, நிஹாங்ஸ் பிரிவினர் நிற்பது போன்ற வீடியோ) என்பது விசாரணைக்கு உரிய விஷயம்" என தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததற்காக இந்தக் கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.