கரோனா பொது முடக்கம் நீட்டிப்பு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வர்த்தகத்தில் எதிரொலித்தது.
ஏமாற்றிய சென்செக்ஸ்:
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று (2020 ஜூன் 30) எப்படியும் 35 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவிய நிலையில், ஏமாற்றத்துடன் முடிந்தது. முந்தைய நாளில் வர்த்தகம் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், நேற்றின் துவக்கமே 35,168.30 புள்ளிகளாக ஏற்றத்தில் இருந்தது. இது உற்சாகத்தை அளித்தாலும், அடுத்தடுத்த செஷன்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் 34,812 புள்ளிகளுக்கும் சென்றது.
இறுதியில், சென்செக்ஸ் 34,915.80 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 45.72 புள்ளிகள் /0.13 சதவீதம் சரிவு ஆகும். வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35,233.91 புள்ளிகள் வரையிலும் இறங்கியது. இச்சந்தையில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் சரிவிலும் வர்த்தகம் ஆனது.
பிஎஸ்இ வர்த்தகம்:
நேற்று பி.எஸ்.இ. சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 2,900 நிறுவனங்களில் 1,258 நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளித்தன. 1,513 பங்குகளின் விலை குறைந்தன. 129 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தடுமாறிய நிப்டி:
தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 10,382.60 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதிகபட்சமாக 10,401.05 புள்ளிகள் வரை உயர்ந்த நிப்டி, இறுதியில் 10,302.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. திங்கள் கிழமை நிப்டி இண்டெக்ஸூடன் ஒப்பிடுகையில், இது 10.30 புள்ளிகள் / 0.10 சதவீதம் சரிவாகும். குறைந்தபட்சமாக 10,267.35 புள்ளிகள் வரை சரிவு கண்டது.
ஏற்றமும் இறக்கமும்:
நிப்டியில் ஸ்ரீ கெம் 3.12 சதவீதம், மாருதி 2.66 சதவீதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2.59 சதவீதம், நெஸ்ட்லே இந்தியா 2.54 சதவீதம், பிரிட்டானியா 2.41 சதவீதம் வரை ஏற்றங்கண்டன. அதேநேரம், பீ.பி.சி.எல்., பவர் கிரிட், சன் பார்மா, கெயில், ஐ.ஓ.சி. ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிப்டியில் முக்கியமான 50 பங்குகளில் 20 பங்குகளின் விலை ஏற்றத்திலும், 29 பங்குகளின் விலைகள் சரிந்தும், ஒரு பங்கின் விலையில் மாற்றமின்றியும் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகத்தில் பதிவு செய்திருந்த 1921 பங்குகளில் 780 பங்குகள் கணிசமான ஆதாயத்தை வழங்கின. 1075 பங்குகளின் விலைகள் சரிந்தன. 66 பங்குகளில் எவ்வித ஏற்ற, இறக்கமும் இல்லை.
புதன்கிழமை எப்படி இருக்கும்?:
ஜூலை மாதத்தின் முதல் வர்த்தக தினமான இன்றும் (புதன்கிழமை) சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் நிலையற்றத் தன்மையே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பங்குகள் கரடியின் பிடியில் இருப்பதால், இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாள்களிலும் சரிவுகள் இருக்கும் என்கிறார்கள் பங்குத்தரகு நிறுவன ஆலோசகர்கள்.
நிப்டி 10,300 புள்ளிகளில் முடிந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் இப்போதைய போக்கைக் கணக்கிடுகையில், ஒன்று 10,200 புள்ளிகளுக்குக் கீழாகச் செல்ல வேண்டும் அல்லது 10,450 புள்ளிகளைக் கடக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் அடுத்தக்கட்ட நகர்வைப் பற்றி நெருக்கமாகக் கணிக்க முடியும் என்கிறார்கள்.
சாய்ஸ் புரோக்கிங் நிறுவன ஆலோசகர் சுமித் பகாடியா, ''நிப்டி இண்டெக்ஸ் 10,100 புள்ளிகள் வரை சரிவடையவே கூடுதல் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார். ஒருவேளை, நகர்வில் நேர்மறையான போக்கு தென்படும் பட்சத்தில் 10,500 புள்ளிகளைத் தொடவும் வாய்ப்பு உள்ளதாகக்'' கூறுகிறார். நிப்டியின் நிலையற்ற வர்த்தகப் போக்கை ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா, நேர்மறையாகவும் பார்க்கிறார்.
கடந்த நான்கு அமர்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, தேசிய பங்குச்சந்தையில் 10,200 - 10,400 புள்ளிகளாக வர்த்தகம் ஊசலாடும் என்கிறார். என்றாலும், சந்தையில் காணப்படும் இறக்கத்தையும் முதலீட்டுக்கு உகந்ததாக மாற்றிக்கொள்ளலாம் என்கிறார்.
ஆதாயம் அளித்த பங்குகள்:
ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் செவ்வாயன்று சில பங்குகள் கணிசமான ஆதாயத்தை அளித்தன. அதன்படி, ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர், எஸ்கார்ஸ்ட், ஏ.சி.சி., ரைட்ஸ், சோனாடா சாப்ட்வேர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், மயூர் யுனிகோட்டர்ஸ், டால்புரோஸ் ஆட்டோ, டான்லா சொல்யூஷன்ஸ், அக்சார்கெம் இண்டியா, ஓரியண்டல் அரோமேடிக்ஸ், காமத் ஹோட்டல்ஸ், எனர்ஜி டெவலப்மென்ட், புளூ டார்ட் எக்ஸ்பிரஸ், சுமித் செக்யூரிட்டீஸ் ஆகிய பங்குகள் கணிசமான ஆதாயம் அளித்தன.
முதலீட்டு ஆர்வம்:
முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் ஐ.டி.பி.ஐ. வங்கி, அலோக் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் காஸ், எப்.டி.சி. மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் மேற்கண்ட பங்குகளின் விலையும் இன்றும் கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிகிறது.