தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், சமீபத்தில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க., இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரிகள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், பின்னா பகுதியில் இன்று நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜி20 மாநாட்டின் வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கானது. ஜி20 பிரதிநிதிகள் நமது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டனர்.
இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லை. அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக குறிக்கோளையும் கொண்டுள்ளனர். இந்தியா கூட்டணி சனாதன கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது. சுவாமி விவேகானந்தா, லோக்மன்யா திலக் ஆகியோருக்கு உத்வேகம் அளித்தது சனதான தர்மம். இன்று சனாதனத்தை வெளிப்படையாக குறிவைக்க துவங்கியுள்ளனர். நாளை அவர்கள் நம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவார்கள். அனைத்து சனாதனிகளும், நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் இதுபோன்றவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.