இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த முழு அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் (01.03.2024) இருந்து மே 18 ஆம் தேதி (18.05.2024) வரை நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பொருளில் 45 சதவீதம் போதைப் பொருள்கள் எனத் தெரிவித்துள்ளது.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றதாக ரூ.849.15 கோடியைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதைப் பொறுத்தவரை ரூ.114.41 கோடியுடன் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா ரூ. 92.55 கோடியுடன் 2 வது இடத்திலும் உள்ளது. டெல்லியில் ரூ. 90.79 கோடியும், ஆந்திராவில் ரூ. 85.32 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ. 75.49 கோடியும் என பறிமுதல் செய்யப்பட்டு அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
இதே காலகட்டத்தில் குஜராத்தில் அதிகபட்சமாக ரூ. 1187.85 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் ரூ. 665.67 கோடி மதிப்பு போதைப் பொருள்களும், டெல்லியில் ரூ.358.42 கோடி மதிப்பு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் ரூ.330.9 கோடி மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.265.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ரூ.1279.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் ரூ.3958.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடு முழுவதும் விதியை மீறிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ரூ. 814.85 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கர்நாடகாவில் ரூ.175.36 மதிப்புள்ள மதுபானங்களும், மேற்கு வங்கத்தில் ரூ.90.42 கோடி மதிப்புள்ள மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் ரூ.76.26 கோடி மதிப்புள்ள மதுபானங்களும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.52.62 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் நாடு முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1260.33 கோடி தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் ரூ.195 மதிப்பு தங்க நகைகளும், மகாராஷ்டிராவில் ரூ. 188 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவில் ரூ. 145 கோடியும், குஜராத்தில் ரூ. 128.56 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99.85 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. வாக்காளர்களுக்கு இலவமாக வழங்க கொண்டு செல்லப்பட்டதாக கூறி ரூ.2006.56 கோடி மதிப்பு பரிசுப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானில் ரூ. 756.77 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களும், மத்தியப்பிரதேசத்தில் ரூ. 177.45 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் ரூ. 162 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரூ. 145.5 கோடியும் மற்றும் ஒடிசாவில் ரூ. 113 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.