
சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று காலை மேயர் பிரியா தலைமை நடைபெற்று வரும் நிலையில் 50 சதவீக்கத்திற்கும் குறைவான மாமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் 2025-26 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான விவாதம் இன்று (21/03/2025) காலை 10 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 200 மாமன்ற உறுப்பினர்களில் 87 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போதும் உறுப்பினர்கள் பலர் கால தாமதமாக வந்திருந்தனர். ஆனால் இன்று விவாதத்தில் கலந்துகொள்ள 50 சதவீதத்துக்கும் குறைவான உறுப்பினர்களே வந்துள்ளனர்.
தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் மாமன்ற கூட்டங்களுக்கு வரும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதமே மாமன்ற உறுப்பினர்கள் சரியாக கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்; சரியாக 10 மணிக்கு அனைவரும் வரவேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான உறுப்பினர்களே வந்துள்ள நிலையில் பாதி இருக்கைகள் காலியாக உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.