Skip to main content

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்; இந்தியாவுக்கு எந்த இடம்?

Published on 21/03/2025 | Edited on 21/03/2025

 

 India get 118 rank on List of happiest countries in the world

ஐ.நாவின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில், பின்லாந்து என்ற நாடு தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று (20-03-25) சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தவர் மீது அக்கறை செலுத்துவது, உணவைப் பகிர்வது, நம்பிக்கை கொள்வது, தாராள மனப்பான்மை உதவிகளை பெறுவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவைகளை கொண்டு 147 நாடுகளின் மகிழ்ச்சி நிலைகளை கண்டறிந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  7.74 என்ற சராசரி அளவைப் பெற்ற பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

இந்த பட்டியலில்,டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும், ஸ்வீடன் நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு 126வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டில், 118வது இடத்தில் இருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன், ஈராக் உள்ளிட்ட பல மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது சற்று கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 109வது இடத்தையும், சீனா 68வது இடத்தையும், இலங்கை 133வது இடத்தையும், வங்கதேசம் 134வது இடத்தையும் பிடித்துள்ளது. அதே போல், உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான சட்டம், அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான வாழ்வுமுறை ஆகியவையே, மகிழ்ச்சியற்று இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, சியரா லியோன் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள், மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. 

சார்ந்த செய்திகள்