மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க வழி பிறந்தது. நேற்று முன்தினம் மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் இன்று மாலை உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.