புதுச்சேரியில் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் தமிழகப் பகுதியிலிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் இன்று காலை முதல் புதுச்சேரிக்கு வர தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதகடிப்பட்டு சோதனைச் சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசார் புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் உள்ள பயணிகள், ஓட்டுநர்கள் முறையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களை பரிசோதனை செய்தனர்.
போலீசாரின் இந்த பரிசோதனை நாளை இரவு வரை செய்யப்படும் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அங்கு ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டு இரண்டாவது தடுப்பூசி செலுத்தவும் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் கணேசன் எஸ்.ஐ அஜய்குமார், டாக்டர் நிஷாந்தி, செவிலியர் விக்டோரியா மற்றும் சுகாதார ஊழியர்கள் உடன் இருந்தனர்.