கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொழிற்சாலை கழிவுகள் ஆறுகளில் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கை வாழ்விடங்களும், பெரும் நீர் நிலைகள் முதலியவையும் தூய்மையாகி வருகின்றது. மேலும் அரிதான விலங்குகளின் நடமாட்டமும் சாலைகளில் அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காரணமாக, நீர் நிலைகள் பெரும்பாலும் குடிக்க உகந்ததாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லி வழியாக பாயும் யமுனை நதி கடந்த 30 நாட்களுக்கு முன்புவரை சாயப்பட்டறை கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும் சேர்ந்து ஆறு முழுவதும் நுரையாக காணப்பட்ட நிலையில், தற்போது ஆற்று நீர் தூய்மையாக மாறியுள்ளது. தண்ணீர் குடிக்கும் தரத்தில் இருப்பதாகவும் இது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.