மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தநிலையில், வரும் நவம்பர் 26ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி ஒரு வருடம் ஆனதை, நவம்பர் 26ஆம் தேதியன்றும், அதன்பிறகும் நாடு முழுவதும் அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, நவம்பர் 29ஆம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடியும்வரை தினமும் 500 விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டரில் செல்வார்கள் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், "மூன்று கருப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்படாதவரையும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம் தரப்படாதவரையும் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், "மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது, விவசாயிகள் தங்களது வீடுகளுக்குத் திரும்புவதை உறுதி செய்யும்” என கூறியுள்ள ராகேஷ் திகைத், இந்தப் போராட்டமானது நீர், நிலம், வனம் ஆகியவற்றைப் பாதுகாக்க நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.