சமையல் எண்ணெய் மீதான சுங்கவரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (04.11.2021) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்றொரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் உள்ளிட்டவைகளுக்கு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவிகிதம் சுங்கவரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.