தானும் ஒருகாலத்தில் பணமதிப்பு நடவடிக்கையை ஆதரித்ததாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதல்வராக ஆட்சியமைத்தவர் நிதீஷ்குமார். ஆனால், அந்தக் கூட்டணி உறவை முறித்துக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.
தற்போது மோடி பிரதமராக பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைடவடைய உள்ள நிலையில், அவரது ஆட்சியில் நிகழ்ந்த வங்கி மோசடிகள், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து பலரும் பேசிவரும் நிலையில், முதல்வர் நிதீஷ்குமாரும் அவற்றை விமர்சித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பேசுகையில், ‘நான் ஒருகாலத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ஆதரித்தேன். ஆனால், எத்தனை பேர் அதனால் பலன் அடைந்தார்கள்? சிலர் தங்களிடம் இருந்த பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திவிட்டார்கள். வங்கி நிறுவனங்கள் பாவப்பட்ட மக்கள் வாங்கும் சொற்பமான கடன் தொகையை தவறாமல் வசூல் செய்துவிடுகின்றன. ஆனால், செல்வாக்கு மிகுந்த சிலர் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்லும்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன. உயரதிகாரிகள் கூட இதைப் பற்றி தெரிந்திருப்பதில்லை. வங்கித்துறை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நான் விமர்சிக்கவில்லை; வருந்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.