ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஒன்றிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மகனான இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து முதல்வரானார். ஜெகன் மோகனின் இந்த அரசியல் பயணத்தில் அவருக்கு அவரது தங்கை ஷர்மிளா உறுதுணையாக இருந்தார்.
இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பிறகு, கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டுமெனவும், தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டுமெனவும் அவரது தங்கை ஷர்மிளா கோரியதாகவும், இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஷர்மிளா, தனது தந்தை பெயரில் தெலங்கானாவில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அவருக்கும் ஷர்மிளாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நின்றவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, எப்போதும் ரக்ஷா பந்தன் அன்று ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ராக்கி கட்டும் ஷர்மிளா, இந்தமுறை ட்விட்டரில் மட்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளாவின் தாயாரான விஜயலட்சுமி, தனது மகளின் பக்கமே நிற்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 12ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, இன்று (02.09.2021) அஞ்சலி கூட்டம் ஒன்றுக்கு விஜயலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு சுமார் 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்தக் கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்ள போவதில்லை என ஆந்திர முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தை நினைவிடத்தில் தனியாக அஞ்சலி செலுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் தனது தாயார் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் ஷர்மிளா கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது தாயார் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் மூலம், ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தாய் மற்றும் தங்கைக்குமிடைய விரிசல் ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் கவுரவ தலைவராக இருக்கும் விஜயலட்சுமி அப்பதவியில் இருந்து விரைவில் விலகுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.