ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் உள்ள தூணில் சிறுமி ஒருவரின் தலை சிக்கிக் கொண்ட நிலையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மூன்றாவது பிளாட்ஃபார்ம் பகுதியிலிருந்த இரும்புத் தூண் ஒன்றில் சாய் அஸ்வினி என்ற சிறுமியின் தலை சிக்கிக் கொண்டது. சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தூணுக்கு இடைப்பட்ட பகுதியில் தலையைச் செலுத்திய போது தலை சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது. இதைக்கண்டு பதறியடித்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டும் சிறுமியை வெளியே கொண்டுவர முடியவில்லை.
அதே நேரம் சிறுமி கத்தி அலறியதால் அங்கிருந்தவர்கள் சிறுமியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஆறுதல் கொடுத்து வந்தனர். பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் இரும்பை வெட்டும் இயந்திரத்தின் மூலம் அந்தத் தூணின் கீழ்ப்பகுதியை வெட்டிச் சிறுமியைக் காப்பாற்ற முயன்றனர். தொடர்ந்து இரும்பை வெட்டும் கருவி கொண்டுவரப்பட்டு தூணின் அடிப்பகுதி வெட்டப்பட்டது. அப்பொழுது வெளியான தீப்பொறிகள் குழந்தையின் மீது பட்ட போதிலும் எப்படியோ சமாளித்துக் குழந்தையைத் தேற்றித் தூண் பகுதி வெட்டி நீக்கப்பட்டது. பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.