இந்தியா முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி வீணாவது அதிகமாக இருக்கும் நிலையில், கேரளாவில் சிறிய அளவில் கூட தடுப்பூசி வீணாவது இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் தடுப்பூசி செலுத்துவது குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில் அவர், "கேரளா, இந்திய அரசிடமிருந்து 73 லட்சத்து 38 ஆயிரத்து 806 டோஸ்களைப் பெற்றது. நாங்கள் 74 லட்சத்து 26 ஆயிரத்து 164 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம்" என கூறியிருந்தார். அதாவது வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களைவிட அதிக டோஸ்களை செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், அது எவ்வாறு சாத்தியமானது என்ற ரகசியத்தையும் உடைத்திருந்தார். இதுகுறித்து அவர், “தடுப்பூசி வீணாகாலம் என்பதனால், அதை ஈடு செய்யும் விதமாக, தரப்படும் கூடுதல் டோஸைக்கூட சரியாகப் பயன்படுத்தி இதனை செய்தோம்” என கூறியிருந்தார். மேலும், இதுதொடர்பாக செவிலியர்களைப் பாராட்டிய பினராயி விஜயன், "எங்கள் சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக செவிலியர்கள், சிறப்பான செயல்திறன் மிக்கவர்கள். அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்குத் தகுதியானவர்கள்" எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தற்போது பிரதமர் மோடி கேரள சுகாதாரப் பணியாளர்களையும், செவிலியர்களையும் பாராட்டியுள்ளார். பினராயி விஜயனின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள மோடி, "தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. தடுப்பூசி வீணாவதைக் குறைப்பது, கரோனாவிற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியமான ஒன்றாகும்" என கூறியுள்ளார்.