கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,409 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 28 நாளில் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்றும் மத்திய சுகாதார துறை இன்று தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி ரிப்பேர் கடைகள், மாணவர்களுக்கான புத்தக கடைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.