18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.
இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (01.07.2024) உரையாற்றினார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரையாற்றுகையில், “மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு. கடந்த முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் உங்கள் 63 உறுப்பினர்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்” எனப் பேசினார். கடந்த முறை எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் மஹூவா மொய்த்ரா நடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவந்து மக்களவையில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.