ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். புதுடெல்லியில் நேற்று நடந்த 'தி தேர்டு பில்லர்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீங்கள் நிதியமைச்சர் ஆக்கப்படுவீர்கள் என்ற பேச்சு உள்ளது. அப்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து உங்களை நிதியமைச்சராக இருக்குமாறு கூறினால் அதனை நீங்கள் ஏற்பீர்களா என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், "அவ்வாறு எனக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால், அதை ஏற்கவும், மீண்டும் நம் நாட்டுக்குத் திரும்பவும் விருப்பம்தான். ஆனால், அதுபோன்று எந்தக் கட்சியும் இதுவரை என்னிடம் கேட்கவில்லை, அணுகவும் இல்லை. இது தொடர்பாக நானும் யாரையும் சந்திக்கவில்லை. மேலும் என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம். புதிய மற்றும் வித்தியாசமான பல சீர்திருத்தங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. நான் அந்த சீர்திருத்தங்களை செய்ய தயாராகவே உள்ளேன். இல்லையென்றால் யாரேனும் அதைக் கேட்க விரும்பினால், அதை மிகவும் விளக்கமாக கூறுவதற்கும் தயாராக இருக்கிறேன்" என கூறினார்.