மத்திய அரசு கரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது என ராகுல்கந்தி தெரிவித்துள்ளார்.
சுமார் 80 நாடுகளில் கரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம் மற்றும் அதற்காகச் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "ஜனவரி 17 ஆம் தேதி முதலே கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் இந்தியா தொடங்கிவிட்டது. மார்ச் 4 ஆம் தேதி வரை, இந்தியாவில் கரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28529 பேர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "மத்திய அரசு கரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க என்ன திட்டம் உள்ளது என்பதை ஆதாரபூர்வமாக மக்களின் முன் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.