இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்தநிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, மத்திய மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்தது. மேலும் நிதிச்சுமையின் காரணமாக கரோனாவால் உயிரழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என தெரிவித்தது.
மத்திய அரசின் இந்தப் பதிலை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு உயிருக்கு ஈடாக பணத்தை அளிப்பது சாத்தியமற்றது. அரசு வழங்கும் இழப்பீடு சிறு உதவிதான். ஆனால் மோடி அரசு அதையும் செய்ய மறுக்கிறது. முதலில் கரோனா பெருந்தொற்றின்போது சிகிச்சை பற்றாக்குறை, தவறான புள்ளிவிவரங்கள் எல்லாவற்றுக்கும் மேல் அரசாங்கத்தின் கொடுமை" என தெரிவித்துள்ளார்.