வெங்காய விலை உயர்வை வைத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த மேட்டரை வைத்து நெட்டிசன்களும், தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் மத்திய அரசை சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, "நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள்" எனக் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சை வைத்து, நெட்டிசன்கள் வழக்கமான தங்களது பாணியில், நிதியமைச்சரையும், மத்திய அரசையும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை விமர்சித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாட்டின் நிதியமைச்சர் என்ற முறையில் தான், வெங்காயத்தின் விலையேற்றம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் அவர் வெங்காயம் சாப்பிடுகிறாரா, இல்லையா என்று இங்கு யார் கேட்டார்" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.